ராஜ்புத் பொந்தில் சமூகத்தினரின் திருமண முறை
விவாகம் உத்திராயணம் வளர்பிறையில் சுபயோக சுபதினத்தில் திருமண நாள்,
திருமண மண்டபம் ஆகியவற்றை குறித்த பிறகு திருமண சடங்குகள் தங்கள் குல
வழக்குப்படி குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்க வேண்டும்.
- முதல் நிகழ்ச்சியாக
கணபதி பூஜை, குல தெய்வ பூஜை மற்றும் இஷ்ட தெய்வங்களை மனதார நினைத்து
இத் திருமண வைபவம்
நல்ல முறையில் சுபமாக நடைபெறவும், மணமக்கள் சிறப்புடன் வாழவும், குலம்
செழிக்கவும் துணை நிற்க எல்லா வல்ல இறைவனை வேண்டுதல் நலம். - ஹல்டி குச்சல்னா (மஞ்சள் இடித்தல்):
மஞ்சள் இடிப்பதற்கு தேவையான விரலி மஞ்சள் வாங்கிக் கொள்ளவும், இடிப்பதற்கு
கல் உரல் தேவைப்படும். உரலுக்கு மஞ்சள்/சந்தனம், பூசி குங்கும பொட்டு இட்டு,
உரலில் விரலி மஞ்சளை கொஞ்ச கொஞ்சமாய் போட்டு ஐந்து சுமங்கலிகள்
ஒவ்வொருவராய் இடிக்க வேண்டும். இடிக்கப்பட்ட மஞ்சள் தூளை பத்திரமாக
எடுத்து வைத்து திருமண நிகழ்ச்சியின் டீக்கா முடிந்த பின் சுமங்கலிகளுக்கு கொடுக்க
வேண்டும். - பரி டால்னா (வத்தல் போடுதல்):
கால் கிலோ (250 கிராம்) உளுந்து ஊறவைத்து அதனை அரைத்து அந்த மாவை
கொண்டு பரி (வத்தல்) போட வேண்டும். அந்த பரிக்கு, பாண், சுப்பாரி, கேலா, நாரல்
(வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்) ஆகியவற்றை கொண்டு கற்பூரம் ஏற்றி பூஜை
செய்ய வேண்டும். இந்த பரியை கௌரி பூஜையின் போது சுமங்கலிகளுக்கு தாம்பூலம்
மற்றும் ரவிக்கை துணியோடு சேர்த்து வழங்க வேண்டும். - சீலா சிலானா (நவதானியத்தை மூங்கில் முறம் கொண்டு புடைத்தல்
சீலா சிலானா என்பது நவதானியங்களை மூங்கில் முறம் கொண்டு புடைக்கும்
சடங்காகும்.
இச்சடங்கு மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் செய்யும் சடங்காகும். முதலில்
மாப்பிள்ளை வீட்டில் இச்சடங்கினை தொடங்க வேண்டும். பின்னர் பெண் வீட்டில்
செய்ய வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டிற்கு ஐந்து (5) முறமும்,
பெண் வீட்டாருக்கு ஏழு (7) முறமும் தேவைப்படும்.
செய் முறை:
முறங்களுக்கு மஞ்சள் பூசி அதன் வலப்புறத்தில் காப்பு கட்ட வேண்டும் .
காப்பிற்கான பொருட்கள் மற்றும் கட்டும் முறை
மஞ்சள் நீரில் நனைத்த நூல் கயிற்றில் வெற்றிலை பாக்கு ஒரு விரலி மஞ்சள், சிறிய
இரும்பு வளையம் சேர்த்து காப்பு கட்ட வேண்டும்.
முறத்தில் வைக்கும் பொருட்கள் : (மாப்பிள்ளை வீட்டார்)
- விரலி மஞ்சள் – 200 கிராம்
- திரவிய போடி பொருட்கள் :
கஸ்தூரி மஞ்சள் – 200 கிராம்
பூலாங்கிழங்கு – 100 கிராம்
விளாமிச்சை வேர் – 100 கிராம்
செண்பகமோட்டு – 100 கிராம்
வெண்கலப்பச்சை – 100 கிராம்
கோஷ்டம் – 50 கிராம்
பன்னீர் ரோஜா இதழ் 50 கிராம்
வெட்டி வேர் – 20 கிராம் - பாசிப்பயறு – 250 கிராம்
- கொண்டை கடலை – 250 கிராம்
- கோதுமை – 250 கிராம்
முறத்தில் வைக்கும் பொருட்கள் ( மணப்பெண் வீட்டார்)
- விரலி மஞ்சள் – 250 கிராம்
- திரவிய பொருட்கள் – (மேற்குறிப்பிட்டது போல்)
- பாசிப்பயறு – 250 கிராம்
- கொண்டைக்கடலை – 250 கிராம்
- கோதுமை – 250 கிராம்
- கடலை பருப்பு – 250 கிராம்
- நெல் – 250 கிராம்
சீலா சிலானா (புடைக்கும்) சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம்,புஷ்பம் கொடுக்கவும்,
அதன் பின் சுமங்கலி பெண்கள் மடியில் மணமக்கள் வீட்டார் மஞ்சள் கிழங்கு, அச்சு வெல்லம்,
வாழை பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைக்க வேண்டும். அதன் பின் இரு கைகளால்
மூன்று முறை பச்சரிசியை மடியில் இட வேண்டும்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஐந்து சுமங்கலிகள் ஐந்து முறங்களில் உள்ள பொருட்களை லேசாக
புடைத்து அடுத்த சுமங்கலி பெண்ணிடம் கொடுத்து ஒவ்வொருவரும் தனித்தனியாக புடைத்து
வைக்க வேண்டும். பொருட்களை கலந்து வைக்கக்கூடாது.
இதே போல் மணப்பெண் வீட்டாரும் ஏழு சுமங்கலி பெண்களை கொண்டு செய்ய வேண்டும்.
- கலஸ் கோட்னா (மண் பானை அலங்காரம்)
முகுர்த்த இடத்தில வைக்கும் சிறிய அளவிலான புதிய மண் பானை இரண்டு (2) வாங்கவும்,
அதனை மூடி வைக்க கூடிய அளவில் நான்கு (4) மூடிகள் தேவை.
செய் முறை:
மண்பானை மற்றும் முடிகளுக்கு மஞ்சள் பூசி, இரு பணிகளுக்கும் பசு மாட்டு சாணத்தை
கொண்டு பருமனான அளவில் சந்திரன், சூரியன், ஸ்வஸ்திக் போன்ற குறிகளை வரிசையாக
இட வேண்டும். வரைந்த பசுஞ்சாணத்தில் கடலை பருப்பினை நடு நடுவே ஒட்டவும்,
ஓரங்களில் நெல் மணிகளை கொண்டு அலங்கரிக்கவும். - டீக்கா (நிச்சயதார்த்த / லக்ன பத்திரிக்கை வாசித்தல் )
திருமணத்தின் முதல் நிகழ்ச்சி நிச்சயதார்த்தம் டீகா (லக்ன பத்திரிக்கை வாசித்து திருமண
நிகழ்ச்சி தொடுங்குவதாக பொருள்) முதலில் மணப்பெண் வீட்டார் திருமண மண்டபத்திற்கு
சென்று மாப்பிள்ளை வீட்டாரை திலகமிட்டு மாலை மரியாதையுடன் ஆர்த்தி எடுத்து வரவேற்க
வேண்டும். மணமகளின் சகோதரரை அலங்கரித்து மணமகனுக்கு மரியாதையை செய்ய
வேண்டியவற்றை தங்கள் சக்திக்கேற்ப (ஏற்கனவே பேசிய படி )பூமாலை, பழ தட்டு 5 வகை
அல்லது 7 வகை , வெற்றிலை, பாக்கு, சந்தனம், பன்னீர், குங்குமம், இனிப்பு வகைகள்
வாழைப்பழம், தங்கள் சக்திக்கு ஏற்ப வெள்ளி சந்தன கிண்ணம், சந்தன கட்டை சிறு துண்டு,
உடை வகையறாக்களை புரோகிதர் ஆசியோடு (மைத்துனன்) சாலாவை ஊர்வலமாக மேள
தாளத்துடன் மாப்பிள்ளை மணமகள் அறைக்கு சென்று அங்கு புரோகிதர் முன்னிலையில்
மாப்பிள்ளையும் அவர் பெற்றோர், குடும்பத்தினர் கிழக்கு பார்த்தபடி உட்கார வைத்து,
மணமகளின் சகோதரன் மற்றும் தாய், தந்தையாருடன் எதிர்புறம் அமர்ந்து கணபதி பூஜை
செய்த பிறகு ஏற்கனவே எழுதி வைத்திருந்த லக்ன பத்திரிகையை சபையில் அனைவரும்
கேட்கும்படி வாசிக்க வேண்டியது. மாப்பிள்ளைக்கு திலகமிட்டு, மாலை மரியாதையுடன் லக்ன
பத்திரிக்கையை தாம்பூலத்தட்டுடன் மைத்துனன் மாப்பிள்ளைக்கு கொடுத்து இனிப்பு வழங்கிய
பிறகு மாப்பிள்ளை மைத்துனனுக்கு மாலை மரியாதையை செய்து இனிப்பு வழங்க
வேண்டியது. அதே போல் இரு வீட்டாரும் மரியாதையை மாற்றி ஏற்று கொள்ள வேண்டியது.
கொண்டு வந்த பொருட்களை மாப்பிள்ளையிடம் கொடுத்த பின் மாப்பிள்ளை வீட்டார் அங்கு
வந்திருக்கும் அனைவருக்கும் இனிப்பு, பழம், வெற்றிலை பாக்கு கொடுத்து கவுரவிக்க
வேண்டியது. அதன் பின் மாப்பிள்ளைக்கும், மைத்துனனிற்கும் ஆரத்தி எடுத்து டீக்கா
நிகழ்ச்சியினை முடிக்கவும். - மாத்தா பூஜா : அம்மன் பூஜை
திருமண நாளிற்கு முந்தைய நாள் மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு (துர்கை) பூஜைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும்.
செய்யும் முறை: பித்தளை சோம்பிற்கு (கலசம்) மஞ்சள் பூசி, மஞ்சள் நனைத்த நூலை செம்பை
சுற்றி அலங்கரித்து, அக்கலசத்தில் நீர் ஊற்றி, அந்த நீரில் விரலி மஞ்சள், வெற்றிலை, பாக்கு,
ஒரு ருபாய் காய்ன் ஆகியவற்றை இட வேண்டும். பிறகு கலசத்தை மாயிலை மற்றும் மஞ்சள்
பூசிய தேங்காயை வைத்து அலங்கரிக்க வேண்டும். கலசம் வைக்கக்கூடிய இடத்தை சுத்தம்
செய்து கோலமிட்டு கலசம் வைக்கும் இடத்தில உள்ள சுவற்றில் வலது கையை மஞ்சளில்
நனைத்து ஒன்பது கை பாத அச்சு (ஹத்தோணி ) வைக்க வேண்டும். (வரிசைக்கு மூன்று
மூன்றாக மூன்று வரிசை) வைக்க வேண்டும். பிறகு கை பாத அச்சு விரல் நுனிகளில் மற்றும்
நடுவில் சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.
- மகர் மட்டி : முகுர்த்த கால் ஊன்ற மண் எடுத்தல்:
முகுர்த்த கால் ஊன்ற மண் எடுக்கும் நிகழ்ச்சி- மகர் மட்டி எடுக்க மணமகனின் சகோதரி மற்றும்
அவர் கணவர் ஆகியோர் தங்களை சந்தனம், குங்குமம் மற்றும் காய் கனிகளை மாலையாக
அலங்கரித்து மணமகனின் ஜீஜா தனது தோளில் மண்வெட்டியுடன் ஒரு குழுவாக மேள
தாளத்துடன் நீர்நிலைக்கு செல்ல வேண்டும். மணமகனின் ஜீஜி (சகோதரி) பணியுடன் உடன்
சென்று குடம் நிறைய தண்ணீர் மொண்டுகொண்டு, நீர் எடுக்கும் இடத்தில் மஞ்சள்
பொடியினால் கோலமிட வேண்டும். கோலத்தின் நடுவே சந்தனம், குங்குமம் இட வேண்டும்.
அக்கோலத்தில் தண்ணீர் நிறைந்த குடத்தை வைக்க வேண்டும். அக்குடத்தின் முன் வாழை
இலை விரித்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய
வேண்டும். மணமகன் வீட்டை சார்ந்த ஐந்து சுமங்கலி பெண்களும், மணமகள் வீட்டின்
சார்பாக ஏழு சுமங்கலி பெண்களும் ஜீஜா கொண்டு வந்த மண்வெட்டி கொண்டு மண் மடியில்
பெற்று முகுர்த்தக்கால் அமைக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். - கம்பஸ்தான் – முகுர்த்தக்கால் ஊன்றுதல்
மாமரத்திலான கம்பஸ்தான் (முகுர்த்த கால் ) நடுவில் நிறுத்தி சுமங்கலி பெண்களால் கொண்டு
வரப்பட்ட மணலை (மகர் மட்டியை) இட்டு கம்பஸ்தான் அமைக்க வேண்டும்.
திருமணம் நடை பெற உள்ள 5 அல்லது 6 நாட்களுக்கு முன்பாக வீட்டில் நவதானியத்தை
ஊறவைத்து மண்ணில் தூவி நிழல் பகுதியில் வைத்து முளை பாரியை முகுர்த்த கால் வைக்கும்
இடத்திற்க்கு கொண்டு வர வேண்டும். கம்பஸ்தானை புரோகிதர் வேதம் முழங்க, மயிலை,
தர்பை பூச்சரம் ஆகியவைகளை கொண்டு காப்பினை மேளதாளத்துடன் அமைக்க வேண்டும்.
கம்பஸ்தானின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட கலசத்தில் நீர்த்துறையில் இருந்து மணமகளின்
சகோதரி கொண்டுவந்த நிறைகுட நீரை ஊற்ற வேண்டும். அலங்கரிக்கப்பட்ட கலசத்தை
சுற்றிலும் நன்கு வளர்ந்த முளை பாரியை கொண்டு கலசம் அசையாமல் வைக்க வேண்டும்.
பிறகு அக்கலசத்தை மூடுவதற்கு முன் கலசத்தினுள் வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், ஒரு
ரூபாய் காயின் இட வேண்டும். அதன்பின் கலசத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு
முடிகளில் ஒன்றினை கொண்டு மூடிவிடவும். மூடிய அந்த மூடியில் பச்சரிசியை பரப்பவும்,
பச்சரிசி பரப்பிய மூடி மீது மற்ரொரு மூடியை அமைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு திரி
போட்டு தீபம் ஏற்ற வேண்டும். - கங்கன் பந்த்னா: காப்பு கட்டுடல்
கம்பஸ்தான் அருகில் அம்மி மற்றும் குழவி வைக்கவும், அம்மி மற்றும் குழவிக்கு நீரால் கழுவி
மஞ்சள் குங்குமமிட்டு அலங்கரிக்கவும்.இத்துடன் நான்கு சிறிய கலசங்கள் வைத்து அம்மன்
பூஜையில் வைத்த கோதுமை, சர்க்கரை சேர்ந்த பொருளை இட வேண்டும். புரோகிதரை
கொண்டு, கம்பஸ்தான், அம்மி, குழவி, தீபம் ஏற்றிய விளக்கு கலசம், மற்றும் நான்கு சிறிய
கலசங்கள் ஆகியவற்றிற்கு வேதம் முழங்க மேளதாளத்துடன் காப்பு (கங்கன் பந்த்னா) கட்ட
வேண்டும். பிறகு நனைத்த உளுந்தினை மணமகனின் தாய், தந்தை ஆகியோர் அம்மியின் எதிர்
எதிர் அமர்ந்து அவ் உளுந்தினை அரைக்க வேண்டும். அரைத்த மாவினை காப்பு கட்டிய
இரண்டு சிறிய கலசங்களை மூடி வைத்து அதனில் காற்று புகா வண்ணம் உளுத்த மாவினை
கொண்டு அடைக்க வேண்டியது. அதே போன்று மண மகளின் பெற்றோரும் செய்ய வேண்டும்.
மூடிய நான்கு கலசங்களையும் மிகவும் ஜாகிரதையாக கம்பஸ்தான் அருகில் வைத்து விடவும்.
- தேல் சடானா : நலுங்கு வைத்தல்
நலுங்கு செய்வதற்கு மணமகளின் வீட்டார் 4 முழ மல் வேட்டியும், தலை பாகை கட்டுவதற்கான
துண்டும் மற்றும் தோளில் போட்டுக் கொள்வதற்கான துண்டும் மணமகனுக்கு கொடுக்கப்பட
வேண்டும். கொடுப்பதற்கு முன் மணமகளின் மஞ்சள் தடவிய வலது கை பாத அச்சு, வேட்டி
மற்றும் துண்டுகளில் பதித்து மணமகனின் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். அதனை
அணிந்து இச் சடங்கில் மணமகன் அமர வேண்டும்.
இதே போன்று மணமகன் வீட்டாரும் மல் சேலை, ரவிக்கை ஆகியவற்றில் மணமகனின் மஞ்சள்
தடவிய வலது கை பாத அச்சு பதித்து மணமகளின் வீட்டாரிடம் கொடுக்கவும். மணமகளும்
கொடுக்கப்பட்ட சேலை மற்றும் ரவிக்கையை அணிந்து நலுங்கு சடங்கில் அமர வேண்டியது.
மணமகன் நலுங்கிற்கு மாம்பலகையில் அமர்ந்து இருக்கைகளில் தேங்காய் மற்றும் ஹத்தோனா
(அரிசி ரொட்டி) அகியவற்றை சேர்த்து பிடித்தபடி காப்பு கட்டவும். மணமகளுக்கும் இதே முறை
பின்பற்றலாகும்.
நலுங்கு முடியும்வரை கொடுக்கப்பட்ட தேங்காய் மற்றும் ஹத்தோனா பிடித்தவாறே இருத்தல்
அவசியம்.
மணமகன் வீட்டில் ஐந்து கன்னிப்பெண்கள் மற்றும் ஐந்து சுமங்கலி பெண்கள் பங்கு பெற
வேண்டும். கன்னியர்கள் நல்லெண்ணையிலும், சுமங்கலிகள் மஞ்சள் நீரிலும் செய்யும்
சடங்காகும்.
முதல் கன்னி பெண் தனது இரு கைகளில் தனித்தனியாக இரு மாவிலை பிடித்து எண்ணையில்
நனைத்து முதலில் கம்பஸ்தான், தீபம் ஏற்றிய கலச விளக்கு, அம்மி, குழவி ஆகியவற்றிற்கு
தடவ வேண்டும். பிறகு மணமகனின் இரு பதங்கைளிலும், இரு முழங்கால்களிலும், இரு தோள்
பட்டை மற்றும் உச்சந்தலை வரை ஐந்து முறை தடவ வேண்டும்.
ஆறாவது முறை தலையிலிருந்து பாதம் வரை (மேல் கூறியது போல்) எண்ணையில் நனைத்து
தடவ வேண்டும். மற்ற நான்கு கன்னியர்களும் மணமகனுக்கு மட்டும் செய்ய வேண்டும்.
முதல் சுமங்கலி பெண் என்னைக்கு பதிலாக மஞ்சள் நீரில் மாவிலையினை தொட்டு
மணமகனுக்கு செய்ய மற்ற சுமங்கலிகளும் மேற் கூறியவாறே மணமகனுக்கு நலுங்கு செய்ய
வேண்டும்.
இதில் உச்சந்தலையிலிருந்து கீழ் நோக்கி வரக்கூடாது.
இந்த சடங்கை மணமகளுக்கு ஏழு கன்னியர்களும், ஏழு சுமங்கலிகளும் ஐந்து முறை மஞ்சளை
ஏற்றியும், 2 இரண்டு முறை மஞ்சளை இறக்கியும் செய்யவும். மணமகனுக்கு செய்ததை
போன்றே செய்ய வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் பொது மணமகனின் பெற்றோர் மணமகனின் பின்னேயும், மணமகளின்
பெற்றோர் மணமகளின் பின்னேயும் நிற்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் பொது சம்மந்தி முறையில் உள்ளவர், மாமன் முறை உள்ளவர்கள் சிக்கட்
செய்வார்கள்,
அதாவது, தாய், தந்தையருக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி, புத்தாடை
தருவார்கள். இசசடங்கு முடிந்த பின் மணமகன், மணமகள் நீராட வேண்டும். நீராடிய பிறகு
தாங்கள் அணிந்திருந்த மல் துணிகளை நீராடிய இடத்தில விட்டு விடவும் அல்லது சலவை
தொழிலாளி இடம் கொடுத்து விடவும்.
மணமகள் நீராடி புத்தாடை அணிந்து அம்மன் பூஜையில் வைத்த கலசத்தின் முன் அமர வைத்து
மூத்த சுமங்கலி ஒருவர் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் இட வேண்டும்.
மணமகன் நீராடிய பின் நீமா ஜாமா உடுத்தி மாலை அணிவித்து மொஹர்
(பனைஓலையினால் செய்யப்பட்ட கிரீடம்) வைத்து அலங்கரிக்க வேண்டும். மணமகனுக்கு
மணமகனின் சகோதரி கண்ணுக்கு மை (காஜல்) இட வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்கவும்.
- மாண்டி பூஜா: மடி பூஜை
பித்தளை குடத்தில் நீர் நிரப்பி குடத்திற்க்கு மஞ்சள் குங்குமமிட்டு குடத்தின் கழுத்தில் பூ சுற்றி,
புதிய தென்னங்குச்சி ஏழு எடுத்து அதன் நுனியில் மல்லிகை பூவினை கோர்த்து வைக்கவும்.
மணமகனின் தாயாரை குடத்திற்கு முன்பாக கிழக்கு நோக்கி அமரவைக்க வேண்டும்.
மணமகன் தன் தாயாரையும், குடத்தையும் சேர்த்து ஏழு முறை சுற்ற வேண்டும். ஒவ்வொரு
முறையும் முடிந்த பின் பூ கோர்த்த தென்னங்குச்சியினை மணமகனிடம் கொடுத்து குடத்தில்
போட செய்ய வேண்டும். 7 ஏழு சுற்று முடிந்த பின் மணமகன் அமர்ந்திருக்கும் தனது தாயை தன்
வலது கை கொண்டு தனது தாயின் வலது கரம் பற்றி தூக்கி விட வேண்டும். கடைசி சுற்று
சுற்றிய பிறகு தன் முந்தானையால் தன் மகனின் முகத்தை மறைத்து பிறர் பார வண்ணம்
அவரை பால் அருந்த செய்ய வேண்டும். அதன் பின் மகன் தன் தாயிடம் உனக்கு பணிக்கு
உதவியாக இருக்க மருமகளை கொண்டு வருகிறேன் என கூறி பராத் செல்ல அறையை விட்டு
வெளியே வர வேண்டும்.
அதன் பின் மணமகன் ஊர்வலம் பராத் செல்ல புறப்பட வேண்டும். பராத் செல்லும் முன்
மணமகனுக்கு ஷாலினி பிடித்த நூலால் பூ நூல் அணிய வேண்டும். - பராத்(மாப்பிள்ளை ஊர்வலம்)
ஒரு மீட்டர் சிவப்பு நிறத்துணி எடுத்து மணமகனுக்கு தலைக்கு மேலே நான்கு
மூலையில் நான்கு பேர் பிடித்து கொள்ள வேண்டும். துணியின் நான்கு மூலையிலும்
ஒரு அரிசி பூரி, வெற்றிலை பாக்கு 1 ரூபாய் நாணயம் வைக்கவும். நான்கு மூலையும்
இணைப்பது போல் நூல் சுற்ற வேண்டும் (கச்சா தாஹா).
இவ்வாறு ஆறு முறை செய்ய வேண்டும். இப்படி சுற்றிய நூலை மணமகனுக்கு பூ
நூலாக புரோகிதர் வேதம் முழங்க பூநூல் அணிய வேண்டும். அதன் பின் பராத்திற்கு
புறப்பட வேண்டும். பராத்திற்கு செல்ல குதிரை (வெண்மை நிறமாக இருந்தால் சரி)
வேண்டும். அக்குதிரைக்கு மாலை அணிவித்து ஒரு தேங்காயில் சூடம் ஏற்றி
குதிரையினை மூன்று முறை சுற்றி சூறை விடவும். பராத் செல்லும்போது மணமகன்
இடுப்பில் குருவாள் அல்லது சிறிய கத்தி வைத்திருக்க வேண்டும். பராத் பேண்ட்
வாத்தியதுடன் செல்லும். பராத் செல்லும் பொது நான்கு வீதிகள் சேருமிடத்தில்
மாப்பிள்ளைக்கும் குதிரைக்கும் சேர்த்து எலுமிச்சை பழம், தேங்காய் ஆகியவற்றில்
கற்பூரம் (சூடம்) ஏற்றி சுற்றி போட வேண்டும்.
பராத் சென்ற பின் மணப்பெண் கௌரி பூஜை செய்ய வேண்டும்.
- புலாவன் : மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபத்தை நெருங்கும் தருவாயில் மாப்பிள்ளை வீட்டார்
மணப்பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை அருகில் வந்து கொண்டுள்ளார் என தகவல்
தெரிவிப்பார். தகவல் அறிந்து பெண் வீட்டார் மண்டபத்திற்கு சற்று தூரத்தில் சென்று
மாப்பிள்ளை வீட்டாரை வருக வருக என சம்பங்கி மாலையோடு வரவேற்க,
மாப்பிள்ளை வீட்டார் சிறிது நேரம் பிகு செய்து பின்னர் இரு வீட்டாரும்
ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு ஆலிங்கனம் செய்துகொண்டு,
மாப்பிள்ளையை குதிரையிலிருந்து கீழே இறக்கி மண்டபத்தின் நுழை வாயில் அருகே
நிற்க செய்து, மணப்பெண் உள்வாசலில் நின்று இடையில் பர்தா (துணி திரை
)மணமகள் வீட்டார் பிடித்துக்கொள்ள மணப்பெண் பந்துக்கள் அவர்கள் குலா வழக்க
படி நெல் பொறி அல்லது அரிசி யை கொண்டு மாப்பிள்ளையை நோக்கி போட
அதனை மாப்பிளை பனை விசிறி கொண்டு தடுக்க அதே சமயத்தில் மாப்பிள்ளை
வீட்டார் மணப்பெண் பந்துக்கள் மீது வெற்றிலை, நெல்பொரி கொண்டு வீசி மகிழ்வர்.
இச்சடங்கு முடிந்ததும், மணமகளின் சகோதரிகள் இருவர் மண்டப வாசலில் தேங்காய்
மூடியில் எண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றி இரு பக்கமும் நின்று
கொள்வார்கள். மணமகனை இருக்கையில் அமரவைத்து மைத்துனன் சந்தனம்,
குங்குமம் இட்டு பால் ,பழம் கொடுக்கவேண்டும். மணமகளின் தந்தை மணமகனின்
கால்களை பலகையில் வைத்து அலம்பி விட வேண்டும்.
கழுத்துக்கு சந்தனம் பூசி, நெற்றிக்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். மணமகளின்
தாயார் ஆரத்தி எடுக்க மணமகன் அவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும்.
விளக்கேந்தி நிற்கும் மணமகளின் சகோதரிகளுக்கும் மாப்பிள்ளை சன்மானம் வழங்க
வேண்டும். அதன் பின்னரே மணமகனை மண்டபத்திற்குள் செல்ல சாலிகளால்
அனுமதி கிடைக்கும்.
15.கௌரி பூஜா : கம்பஸ்தானிற்கு முன் மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ,
பழம் ஐந்து ரவிக்கை துணி, கண்ணாடி வளையல், , சீப்பு, கண்ணாடி, குங்கும சிமிழ்,
கண்மை டப்பா ஆகியவை வைக்க வேண்டும்.
ஐந்து சுமங்கலிகள் மணமகளை அழைத்து வந்து கம்பஸ்தான் முன் அமர வைக்க
வேண்டும். அவர்களும் உடன் அமர வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு முன் வாழை
இலை வைத்து அதில் வாழை பழம் , ரவிக்கை துணி ஐந்து இலைகளில் வைத்து அதன்
முன் அரிசி மாவு, மஞ்சள் போடி கலந்து செய்த அகல் விளக்கு, வெற்றிலை, பாக்கு
,பழம் வைத்து விளக்கு, ஊதுவத்தி ஏற்றி வைக்கவும். மணமகன் செந்தூரம் எடுத்து
வந்து அங்கு வைக்க வேண்டும்.
மணமகள் இடது கை மோதிர விரலும், கட்டை விரலும் இணைத்து செந்தூரத்தை
எடுத்து கௌரைக்கு இட வேண்டும். அதன் பிறகு சுமங்கலி ஒருவர் கௌரைக்கு
சூடம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். ஐந்து சுமங்கலிகளுக்கு தங்கள் இலையில்
வைத்துள்ள வாழைப்பழத்தில் சிறிதளவு எடுத்து மணமகளின் இலையில் வைத்து
சாப்பிட செய்ய வேண்டும். பின்னர் சுமங்கலிகள் ரவிக்கை துணிகளை
எடுத்துக்கொள்ளலாம். அதன் பின் மணமகளுக்கு கன்னிகா தானம் செய்ய மஞ்சள்
நிற புடவை அணிவிக்கவும்.
- ஜனேவ் தாரன் : பூணூல் அணிதல்:
புரோகிதர் முன்னிலையில் மணப்பெண்னின் சகோதரனை கொண்டு மணமகனிற்கு
பூநூல், தாம்பூலம், வஸ்திரம் ஆகியவை புரோகிதர் வேத மந்திரத் தோடு மாப்பிள்ளை
பூநூல் அணிய வேண்டியது. இதற்கு மாப்பிள்ளை வீட்டார் மைத்துனனிற்கு
மரியாதையை செய்யதலாகும். - மோர்னி (மணமகளுக்கு) கட்டுதல்: பனைஓலையால் செய்யப்பட்ட கிரீடம்
மஞ்சள்/ சிகப்பு சால்வையை கொண்டு மாப்பிள்ளையின் மூத்த சகோதரர் (ஜேட் )
மணப்பெண்ணிற்கு அணிவித்த பின் மோர்னி கட்ட வேண்டும். - குப்த்தான் – கன்யாதான் / கன்னிகாதானம்
மணப்பெண்ணையும், மண்மகனையும் மண்டபத்தில் அமர வைத்து அவர்களுக்கு
இடையில் பர்தா பிடித்து ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்கச்செய்து,
மாப்பிள்ளையின் இரு கைகளையும் ஒன்றாக பிடிக்க செய்து அதன் மேல் பெண்ணின்
இரு கைகளையும் பதிய வைத்து, முதலில் பிச்சுவா (மெட்டி), மூக்குத்தி,காதணிகள்
போன்ற நகைகளோடு தக்ஷனை போட்டு மணப்பெண்ணை தாய், தந்தையர்
புரோகிதர் வேத மந்திரம் முழங்க தீர்த்தம் இட தாரை வார்த்து கொடுக்க வேண்டும். - பௌரி : அக்னியை சுற்றி வருதல்
மணமேடையில் ஹோமம் வளர்த்து மனப்பெண் முதலில் செல்ல மாப்பிள்ளை
பெண்ணின் கை கோர்த்து பின் தொடர்ந்து 7 முறை சுற்றி வர வேண்டும்.
இத்தருணத்தில் பெண் வீட்டார் மனமேடையை சுற்றி இருத்தல் வேண்டும். ஒவொரு
சுற்றும் ஹோம குண்டத்தின் முன் வரும் பொது மணமகளின் சகோதரன்
மாப்பிள்ளையின் கைமேல் மணப்பெண்ணின் கையினை வைத்து தன் கையால் நெல்
பொறி ஹோம குண்டத்தில் போட வேண்டும். இவ்வாறு 7 முறை செய்தல் வேண்டும்.
அதன் பின் மாப்பிள்ளையை மட்டும் மனமேடையில் அமர வைத்து, மணப்பெண்ணை
அறைக்கு அழைத்து சென்று மணமகன் வீட்டார் கொடுத்த (சடாவ்) பெட்டியிலிருந்து
மாங்கல்ய புடவை, ரவிக்கை, நகைகள், வளையல்கள், குங்குமம், வாசனை திரவிய
பொருள்கள் ஆகியவற்றை உபயோகித்து மடியில் ஸ்வாக் புடா வை வைத்து கட்டி
மணமேடைக்கு அழைத்து வர வேண்டும். இதன் இடையில் மாங்கல்யத்தை தாம்பூல
தட்டில் தேங்காயில் சுற்றி அட்சதை (மஞ்சள் கலந்த அரிசி வைத்து வந்திருக்கும்
உறவினர், நண்பர்கள் ஆகியோரின் முன் காண்பித்து ஆசி பெற்று அட்சதை கொடுத்து
மாங்கல்யத்தை புரோகிதர் முன் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- நிம்போலி தாரன்: மாங்கல்யம் கட்டும் சடங்கு
மணமகன், மணமகளுக்கு செந்தூரம் இட வேண்டும். செந்தூரம் இடும்போது
மணமகனின் இடது கை மோதிர விரலும், கட்டை விரலும் சேர்த்து மணமகளின்
நெற்றி வகிட்டில் மேல் நோக்கி ஏற்றி இட வேண்டும். இவ்வாறு மும்முறை செய்தல்
வேண்டும். அதன் பின் மாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும். மாங்கல்ய தாரணம்
முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு சகாவ் பீடா தர வேண்டும். (சகாவ் பீடா என்பது கசகச
ஒரு தேக்கரண்டி, கற்கண்டு சிறு துண்டு,ஏலக்காய் 1, கிராம்பு 1) இத்துடன் செந்தூரம்,
1ரூ நாணயம் ஆகியவை ஒரு பையில் வைத்து சுமங்கலிகளுக்கு தர வேண்டும்.
மாங்கல்ய தாரணம் முடிந்த பின் பூஜை செய்த சிகப்பு துணியின் ஒரு மூலையில் மஞ்ச
கிழங்கு, வெற்றிலை பாக்கு 1ரூ நாணயம்,வைத்து முடிந்து கொள்ள வேண்டும்.
இத்துணியின் மற்றோரு நுனியில் மனைகளின் முந்தானை தலைப்பை முடிந்து
கொள்ளவும். பின் மணமகன் முன் செல்ல மணமகள் பின் செல்ல வேண்டும்.
இவ்வாறு மனமேடையை 2 இரு முறை சுற்றி வர வேண்டும். அவ்வாறு சுற்றி வரும்
போது மைத்துனர் மணமகனின் கையை கீழேயும் மணமகளின் கையை மேலேயும்
வைத்து பச்சை நெல் மணிகளை தர வேண்டும். மனமேடையை சுற்றி வரும் போது
மணப்பெண்ணுக்கு பிச்சுவா (மெட்டி) அணிவிக்க வேண்டும். சுற்றி வந்து முடிந்த பின்
மணமகளின் தங்கைக்கு சாலி ஜோடா தர வேண்டும். அதன் பின் மணமக்கள் மாத்தா
பூஜா செய்த கலசத்திற்கு முன்பாக உட்கார்ந்து அங்குள்ள விளக்கில் கூடுதலாக ஒரு
திரியிட்டு தீபம் ஏற்றி ஒரே ஜோதியாய் ஒளி கூட்ட வேண்டும். இருவரும் அமர்ந்து
பால், பழம், சாப்பிட வேண்டும். வெற்றிலை பாக்கு வைத்த தட்டில் மணமகள்
மணமகனின் கையில் உள்ள காப்பை கழற்றி போட வேண்டும். அதே போல்
மணமகன் மணமகளின் காப்பை கழற்றி போட வேண்டும்.
அதன் பின் தாம்பாள தட்டில் மொஹரை கழற்றி வைத்து வெற்றிலை பாக்கு வைத்து
சூடம் ஏற்றி மூன்று முறை சுற்றி வந்து கும்பிட வேண்டும். அதன் பின் மணமக்கள்
மாலை மாற்றி கொள்ள வேண்டும். பின் மோஹரையும், முளைப்பாரியையும் மற்றும்
இதர பொருட்களை ஓடும் நீரில் ஆறு அல்லது கடலில் போட்டு விடவும்.
21.ஆசிர்வாதம் மற்றும் உபசரணைகள்:
செந்தூர திலகத்தை மணமகன் மணமகளுக்கு இட வேண்டும். மாப்பிள்ளை மற்றும்
மணப்பெண் ஆகியோரை மணப்பெண்ணின் சகோதரி செந்தூரம் இட்டு மணமகன்
பாதங்களுக்கு குங்குமமிட்டு ஆடைகள் கொடுத்து மரியாதை செலுத்திய பிறகு
வந்தவர்கள் மணமக்களை ஆசிர்வதிக்க வேண்டும். ப்ரோகிதருக்கு உரிய தக்ஷிணை
கொடுத்து அவரை நமஸ்கரித்து ஆசி பெற்று, மூத்தவர்களிடம் ஆசி பெற்று இனிதே
முடிக்க வேண்டியது.
22.பிதாகி : மாப்பிள்ளை வீட்டிற்கு மணப்பெண்ணை அனுப்பும் நிகழ்ச்சி:
நிகழ்ச்சிகள் யாவும் முடிந்த பின் மணப்பெண்ணை தங்களின் பெற்றோர்,
உறவினர்கள் ஒன்று கூடி மணமகன் வீட்டிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சியாகும்.
— சுபம்- –
தொகுப்பு: ஷோபாராணி பாலாஜி சிங் – சென்னை